Pages

Subscribe:

Tuesday, July 30, 2013

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்கிற நூலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய ரா. முருகவேள் மற்றும் பதிப்பித்த விடியல் பதிப்பகத்தினருக்கு முதலில் நம் வாழ்த்துகள். மூல ஆங்கில நூலை வாசித்தது போன்ற மிகவும் நெருக்கமான, எந்த நெருடலுமின்றி இடைவிடாத பயணமாக நூல் தன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. மிகவும் பொருத்தமான வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள், அடிக்குறிப்புகள் என ஒரு முக்கிய நூலுக்குத் தேவையான அனைத்து குணங்களும் பொருந்தியதாக விளங்குகிறது.
பெரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வங்கிகள் ஆகியவற்றுக்கு ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஒத்துழைக்கும் அரசுகள் - என இந்த மூவர் கூட்டணியின் இயக்கத்தை மிக விரிவாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார் ஜான் பெர்கின்ஸ்.  

பொம்மலாட்டக்காரர், பழங்குடியினர், இந்தோனேசிய ஆங்கில மாணவி, ஆப்கான் பிச்சைக்காரர், இளவரசர் டயிள்யூ, பொன்னிறக் கூந்தல் கொண்ட அழகான இளம் பெண்கள், நீலக் கண்களுடன் சாலி, புஷ் குடும்பத்தினர், பின்லேடன், இடி அமின், அழுகிப் போன உடல்கள், வீச்சமடிக்கும் துர்நாற்றம், 9/11 கட்டட இடிபாடுகள், கெரில்லாக்கள், அமேசான் காடுகள், சவுதி அரச குடும்பத்தினர், ரோல்டோஸ், ஓமர், அலாண்டே, ‘மெய்ன்' நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அதன் பங்குதாரர்கள், மிஷினரிகள், பேதி மருந்து புட்டிகள், மதுக் கோப்பைகள் என இந்நூல் நம் கண்முன் நூற்றுக்கணக்கான காட்சிகளையும் படிமங்களையும் உருவாக்கி வித்தை காட்டுகின்றன. நாள்தோறும் 24,000 பேர் பட்டினியால் செத்து மடிய, மறுபுறம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செழிப்புடன் விளக்கொளியில் மின்னுகிறது

சவுதி அரேபியாவைப் போல் சென்னையில் ஓனிக்ஸ் நிறுவனம் குப்பை அள்ளுவது, பாதாள சாக்கடைகள், அணு உலைகள், நர்மதா அணை எனப் பல நூறு திட்டங்களில் முடங்கிக் கிடக்கும் கோடான கோடி டாலர்கள்; அதைவிட இந்தியா முழுவதும் போடப்பட்டு வரும் நான்கு வழி சாலைகள் - நடப்பில் நாம் காணக்கூடிய எடுத்துக்காட்டுகளாகும். முற்றிலும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவை யாருக்கான சாலை? இந்த சாலைகளை ஒட்டிச் செல்லும் பல கிராம சாலைகள் ஆண்டுக்கணக்காகப் பராமரிப்பின்றி கிடப்பது ஏன்? இந்த சாலைகளில் எளிய இந்தியர்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? அலுவலகக் கோப்புகளின் துர்நாற்றம், இந்திய சிவில் சமூகத்தின் பரப்பளவெங்கும் வீசிக் கிடக்கிறது.

"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.

"உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா...!!! அங்கே தான் அந்த நிறுவனங்களின்...உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் 'உலகமயமாக்கல்' என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது." இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.
 
பெர்கின்சைப் போல் நம்மைச் சுற்றி முகமூடிகளுடனும், முகமூடிகளின்றியும் பலர் உலவுகின்றனர். இவர்களை அடை யாளம் காணும் பணி முக்கியமானது. அதற்கான கையேடுகளைக்கூட நாம் கூட்டாக உருவாக்கலாம். சென்னையில் நங்கூரமிட்டுள்ள ‘நிமிட்ஸ்' அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலிலிருந்து பல பெர்கின்ஸ்கள் (மாலுமிகள்) துடைப்பங்களுடன் சென்னையை சுத்தம் செய்யத் தரையிறங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் சமூக சேவைகளை தொடங்கிவிட்டதாக ‘சன்' தொலைக்காட்சி தமிழ்ச் சமூகத்திற்கு தலைப்புச் செய்தியாக வழங்குகிறது. பெர்கின்சையும் அவரது பங்காளிகளையும் சேர்த்தே அடையாளம் காண்போம்.

இந்நூலிலிருந்து...
.
ஆங்கில மாணவி தீர்க்கமாக என் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள்
.
இவ்வளவு பேராசை கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சுயநலத்தையும், மாளிகை போன்ற வீடுகளையும், பேன்சி ஸ்டோர்களையும் தவிர, உலகில் வேறு விஷயங்களும் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
.
மக்கள் உணவின்றிப் பட்டினி கிடக்கிறார்கள்; நீங்களோ உங்கள் கார்களுக்குத் தேவையான பெட்ரோலைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகள் குடிக்க நீரின்றி மடிந்து கொண்டிருக்கின்றன; நீங்களோ நவநாகரிக பாணிகளுக்காக ‘ஸ்டைல்' ‘பேஷன்' இதழ்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
.
எங்களைப் போன்ற நாடுகள் வறுமையில் கழுத்தளவு மூழ்கிப் போயிருக்கிறோம். எங்கள் ஓலக்குரல்கள் உங்கள் செவிகளில் விழுவதில்லை. யாராவது உங்களுக்குச் சொல்ல முயற்சித்தால், உடனே அவர்களுக்குப் புரட்சியாளர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள் என்றும் முத்திரை குத்துகிறீர்கள்.
.
ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை மேலும் மேலும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் தள்ளுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு உங்கள் இதயங்களைத் திறக்க வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் ஒழிந்தீர்கள்!

நன்றி: 
ஜான் பெர்க்கின்ஸ்

தமிழில்: இரா. முருகவேள்

விடியல் பதிப்பகம்

விலை ரூ 150


கிடைக்குமிடம்

கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
 



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog